ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன? | Stree Deergha Porutham In Tamil
அனைவருக்கும் வணக்கம்! திருமண பேச்சை எடுத்தவுடன் மணமகன் மற்றும் மணமகளின் ஜாதகங்களை இரு குடும்பங்களும் பரிமாறிக் கொள்வதே முதல் படியாக இன்று வரை செய்யப்படுகிறது. எதற்காக இது? ஆண் அல்லது பெண் வீட்டார் நல்ல வசதி உள்ளவர்களாக இருந்தால் போதாதா? ஆண்/பெண் இருவரும் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமானவராக இருந்தால் போதாதா? ஏன் திருமணத்திற்கு முன்பு திருமணப் பொருத்தம்/ ஜாதக பொருத்தம் பார்க்க வேண்டும்? போன்ற பல கேள்விகள் சிலருக்கு தோன்றும். இதை போன்ற கேள்விகளுக்கெல்லாம் தெளிவான விளக்கத்தை தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமான இணையத்தளம் இது.
மணமக்களின் பிறந்த நேரம், ராசி, நட்சத்திரம், ஜாதகம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து கொண்டு திருமணத்திற்கு பின்பு அந்த தம்பதியின் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று கணிப்பதற்கு தான் திருமண பொருத்தம் சரியான முறையில் சரியான ஜோதிடர்களால் பார்க்கப்படுகிறது. திருமண பொருத்தத்தில் மொத்தம் 12 பொருத்தங்கள் இருந்தாலும் அதில் 5 பொருத்தங்கள் தான் முக்கிய பொருத்தங்கள், அதிலும் குறிப்பாக இரண்டு பொருத்தம் இருந்தால் மட்டுமே திருமணம் செய்து வைக்கப்படும். அதன் பிறகு அந்த தம்பதியினருக்கு எந்த வித இன்னல்கள் இல்லாத வாழ்க்கை அமையும். 12 பொருத்தங்களில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், மகேந்திர பொருத்தம் ஆகியவற்றை பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம். அது போலவே மீதம் உள்ள ஒவ்வொரு பொருத்தத்தை பற்றிய முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். இந்த பதிவில் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன? எப்படி பார்ப்பது? இல்லை என்றால் என்ன செய்வது? என்றெல்லாம் பார்க்கலாம்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் என்றால் என்ன?

சுருக்கமான விளக்கம்:
மணமகளின் மாங்கல்ய பலத்தை குறிப்பது தான் இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம். மணமக்களுக்கு இந்த பொருத்தம் இருந்தால், திருமணத்திற்கு பின் அவர்களின் வாழ்வில் அஷ்டலட்சுமி கடாட்சம், யோகம், தன, தான்ய விருத்தி உறுதியாக நிலைத்திருக்கும். மணமகள் மற்றும் மணமகனின் உயிருடன் சம்பந்தப்பட்டதால், இந்த ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் அவசியம் என்று கூறப்படுகிறது.
“இல்வாழ்க்கையில் நம்பிக்கை சேர்க்க
வேண்டும் ஸ்திரி தீர்க்க”
ஸ்திரீ/ஸ்ரீ – பெண்/மணமகள்
தீர்க்க – நீண்ட கால ஆயுள்
இன்னும் தெளிவாக சொல்ல போனால், மூத்தவர்கள், பிராமணர்கள் திருமணம் முடிந்த பின்பு மணமகளை தீர்க்க சுமங்கலி பவா..! அல்லது தீர்க்க அயுஷ்மான் பவா..! என்று சொல்லி வாழ்த்துவார்கள். இந்த சுப வாழ்த்து என்ன சொல்ல வருகிறது என்றால் திருமணம் ஆன பெண்கள் தன் கணவனுடன் சேர்ந்து நீண்ட காலம் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று குறிக்கிறது. ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் பொருந்தி இருந்தால், இந்த சுப வாழ்த்தை போலவே மணப்பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள் என்று கணிக்கலாம்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் எப்படி பார்ப்பது?
மணப்பெண் நட்சத்திரத்தை முதலாவதாக வைத்துக் கொண்டு மணமகன் நட்சத்திரம் வரை எண்ண வேண்டும். அப்படி எண்ணி வரும்போது மணமகனின் நட்சத்திரம் 13க்கு மேல் [13-27] இருந்தால் ஸ்திரீ தீர்க்கம் உண்டு.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் 7க்கு மேற்பட்டும் 13க்கு குறைவாகவும் [7-13) இருந்தால் மத்திய ஸ்திரீ தீர்க்க பொருத்தம் உண்டு என்று அர்த்தம்.
அதுவே மணமகள் நட்சத்திரம் முதல் மணமகனின் நட்சத்திரம் 7க்கு குறைவாக[1-7) இருந்தால் ஸ்திரீ தீர்க்க பொருத்தம் இல்லை.
ஆணின் நட்சத்திரத்தால் பெண்ணின் ஆயுட்காலம் மாறுபடுகிறது, எனவே ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் இல்லை என்றால் ஸ்திரீக்கு (மணமகளுக்கு) தீர்க்கம் (நீண்ட ஆயுள்) இருக்காது. எதோ ஒரு வகையில் கண்டம் உண்டாகும்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
மணமகள் மற்றும் மணமகனின் ஆயுள் காலத்தை கணிப்பதால் திருமண பொருத்தத்தில் ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் முக்கியமான பொருத்தமாக பலராலும் கருதப்படுகிறது. திருமணம் முடிந்த கணவன் மனைவி இருவரும் இணைந்து சந்தோஷமாகவும், நிறைவாகவும் வாழ வேண்டும். திருமணத்தில் ஒரு மாங்கல்யம், 60, 70, 80, 96 வயதில் ஒவ்வொரு மாங்கல்யம் என மொத்தம் ஐந்து மாங்கல்யம் கணவனிடம் இருந்து மனைவி பெற்று வாழ்வதை தான் முழுமையான திருமண வாழ்க்கை என்பர்.
அதை சில வார்த்தைகளில் சொல்ல வேண்டுமென்றால், மணப்பெண்ணின் ஆயுள் காலம், குண நலன்கள் மற்றும் பொதுவான பண்புகள் எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள தான் இந்த பொருத்தம்.
ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் பார்ப்பதன் மூலம் (ஸ்த்ரீ) மணமகளின் ஆயுட்காலம், ஆரோக்கியம், குணங்கள் மட்டுமின்றி மணமகனின் ஆயுட்காலம், ஆரோக்கியம், குணங்களை பற்றியும் தெரிந்து கொள்ளலாம். ஸ்திரீ தீர்க்கப் பொருத்தத்தின் முக்கியமான நோக்கம் என்னவென்று விரிவாக பார்த்தோம். இப்போது இந்த பொருத்தம் பொருந்தி வரவில்லை என்றால் திருமணம் செய்ய கூடாதா? ஒருவேளை திருமணம் செய்தால் ஆண்/ பெண் நீண்ட ஆயுளுடன் வாழ மாட்டார்களா? என்ற கேள்வி அனைவருக்கும் தோன்றும்.
முன்பே கூறியது போல திருமண பொருத்தத்தில் எந்த பொருத்தங்கள் இல்லாவிட்டாலும் யோனி பொருத்தம்,
ரஜ்ஜு பொருத்தம் கட்டாயமாக இருக்க வேண்டும். இந்த இரண்டு பொருத்தங்கள் இருந்தாலே அந்த தம்பதி அனைத்து செல்வங்களையும் பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வர். எனவே ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் பொருந்தி வரவில்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம்.
| தினப் பொருத்தம் என்றால் என்ன ? | Dina Porutham in Tamil |
| கணப் பொருத்தம் என்றால் என்ன ? | Gana Porutham In Tamil |
| மகேந்திரப் பொருத்தம் | Mahendra Porutham In Tamil |




