மகேந்திரப் பொருத்தம் | Mahendra Porutham In Tamil
அனைவருக்கும் வணக்கம். தற்போது உள்ள சூழ்நிலையில் பல பெற்றோர்களின் கவலை என்னவென்றால் தன் பிள்ளைகளுக்கு ஒரு சரியான திருமண வாழ்க்கை அமையவில்லை அல்லது ஆண்/பெண் ஜாதகத்தில் தோஷங்கள் உள்ளதால் திருமணம் தாமதிக்கிறது என்பது தான். அதே நேரத்தில் சிலர், தன் பிள்ளைகளுக்கு திருமணம் முடிந்த பின்பு அவர்களுக்கு குழந்தை பிறக்கவில்லை அல்லது குழந்தை பிறக்க தாமதம் ஆகிறது என கவலையுடன் இருக்கிறார்கள். திருமணத்திற்கு பார்க்கப்படும் பொருத்தங்களில் மூன்றாவதாக உள்ள மகேந்திரப் பொருத்தம் புத்திர பாக்கியத்தை பற்றி குறிப்பிடுகிறது.
சில செயல்களை நாம் செய்யும் முன் அதன் உண்மையான பயன்கள் மற்றும் முழுமையான செய்முறையை தெரிந்து கொண்டு அவற்றை முழு ஈடுபாட்டுடன் முறைப்படி செய்தால் நிச்சயம் அந்த செயலின் பயன்களை சிறந்த முறையில் காணலாம், இது திருமணப் பொருத்தம் பார்த்து கொண்டு இருக்கும் உங்களுக்கும் தான்! இந்த இணையத்தில் திருமணப் பொருத்தத்தின் விதிகள் மற்றும் அர்த்தம் போன்றவற்றை தெரிந்து கொள்ளுங்கள்.
முந்தைய பதிவில் தினப் பொருத்தம், கணப் பொருத்தம் பற்றிய தகவல்களை பார்த்தோம். இந்த பதிவில் நாம் பார்க்க போவது – வரிசையில் அடுத்து வரும் மகேந்திரப் பொருத்தத்தின் முழுமையான விவரங்களை தான், வாங்க பார்க்கலாம்.
மகேந்திரப் பொருத்தம் என்றால் என்ன?

மகேந்திரப் பொருத்தம் சுருக்கமான விளக்கம்:
திருமணம் வாழ்க்கையை தொடங்க இருக்கும் தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம்/புத்திர பாக்கியம் எப்படி அமைந்துள்ளது என கணிப்பது தான் இந்த மகேந்திரப் பொருத்தம்.
“புத்திர பாக்கியம் கிடைக்க
மகேந்திர பொருத்தம் வேண்டும்”
மகேந்திரப் பொருத்தம் விளக்கம்
திருமணத்திற்கு பின் கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழ்வது மட்டும் குடும்பம் அல்ல. அந்த தம்பதியினருக்கு குழந்தை பிறந்த பின்பு தான் அவர்களின் குடும்பம் முழுமை பெற்று வம்சம் விருத்தி ஆகிறது. அப்படிப்பட்ட குழந்தை பாக்கியம் மணமக்களுக்கு இருக்கிறதா? ஆண் குழந்தை பிறக்குமா? பெண் குழந்தை பிறக்குமா? போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஜோதிட ரீதியாக இந்த மகேந்திரப் பொருத்தத்தின் மூலம் பதில் தெரிந்து கொள்ளலாம்.
இந்த மகேந்திர பொருத்தத்தை பார்ப்பதன் மூலம் பல விஷயங்களை சரியாக கணித்து விடலாம்.
திருமணம் செய்து கொள்ள விரும்பும் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் இருக்கிறதா? ஆண் குழந்தை பிறக்குமா?
பெண் குழந்தை பிறக்குமா? அவ்வளவு ஏன், எத்தனை குழந்தை பிறக்கும்? உள்ளிட்ட கேள்விகளுக்கு இந்த மகேந்திரப் பொருத்தத்தை வைத்து ஜோதிடர்கள் சரியாக கணித்து பதில் சொல்வார்கள்.
மகேந்திரப் பொருத்தம் பார்ப்பது எப்படி?
திருமணப் பொருத்தத்தில் மகேந்திர பொருத்தம் பார்ப்பது சற்று எளிதானது. மணப்பெண் ஜாதகத்தில் உள்ள நட்சத்திரத்தை முதலாக வைத்துக் கொண்டு எண்ண வேண்டும், அப்போது மணமகனின் நட்சத்திரம் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆவதாக வந்தால் அந்த தம்பதிக்கு மகேந்திரப் பொருத்தம் உள்ளது என்று அர்த்தம்.
அதுவே, மணமகளின் நட்சத்திரத்தில் இருந்து எண்ணும்போது மணமகனின் நட்சத்திரம் 2,3,5,6,8,9,11,12,14,15,17,18,19,20,21,23,24 என்ற எண்ணிக்கையில் வந்தால், அவர்களுக்கு மகேந்திர பொருத்தம் இல்லை என்று அர்த்தம்.
மகேந்திர பொருத்தம் அவசியமா ?
குழந்தை பாக்கியத்தை பற்றி கணிப்பது தான் மகேந்திரப் பொருத்தம் பார்ப்பதற்கு மிக முக்கியமான காரணம். மேலும் திருமணம் செய்து கொள்ளும் மணமக்களுக்கு புத்திர பாக்கியத்தில் ஏதேனும் குறைபாடு உள்ளதா? அல்லது தம்பதியினரின் சந்ததி விருத்தி அடையுமா? என்று இந்த மகேந்திர பொருத்தத்தை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறக்குமா பெண் குழந்தை பிறக்குமா என்று கூட இந்த மகேந்திர பொருத்தத்தை வைத்து தீர்மானிக்கலாம்.
எனவே மகேந்திரப் பொருத்தம் அவசியமா என கேட்டால், குழந்தை பாக்கியத்தில் இது அவசியமாக இருந்தாலும் திருமண பொருத்தத்தில் மகேந்திர பொருத்தத்திற்கு ஈடாக சில பொருத்தங்கள் உள்ளது.
மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்யலாமா?
மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் திருமணம் செய்ய கூடாதா? மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் அந்த மணமக்களுக்கு குழந்தை பாக்கியமே கிடைக்காதா? போன்ற நியாயமான கேள்விகள் பலருக்கும் உண்டு. மகேந்திர பொருத்தம் பொருந்தி வரவில்லை என்றாலும் திருமணம் செய்து கொள்ளலாம். ஏனெனில் திருமணத்திற்கு முக்கியமான பொருத்தங்களாக கூறப்படும் தினப் பொருத்தம், கணப் பொருத்தம், ராசி பொருத்தம், யோனி பொருத்தம், ரஜ்ஜு பொருத்தம் என ஐந்து பொருத்தங்கள் பொருந்தி வந்தால் மட்டும் போதுமானது. அதிலும் தினப் பொருத்தமும், கணப் பொருத்தமும் சரியாக பொருந்தி இருந்தாலே மணமக்களுக்கு குழந்தை பாக்கியம் நிச்சயம் இருக்கும்.
அப்படி இல்லை என்றால் மணமக்களின் ஜாதக பொருத்தத்தில் விருச்ச பொருத்தம் இருந்தால், தம்பதியினரின் அடுத்த சந்ததி விருத்தி பெறும் என்று கணிக்கலாம். எனவே விருச்ச பொருத்தம் பார்த்து திருமணம் செய்து கொள்ளலாம்.
திருமண பொருத்தத்தில் மகேந்திர பொருத்தம் இல்லை என்றால் ஜாதக பொருத்தத்தில் ஆண் பெண் இருவரின் ஜாதகத்திலும் ஐந்தாம் அதிபதி, ஐந்தாம் பாவகம், குரு பகவானின் நிலை வலிமையாக இருந்தால் கண்டிப்பாக தம்பதிகளுக்கு குழந்தைச் செல்வம் கிடைக்கும்.
மகேந்திர பொருத்தம் இல்லையென்றால் நீங்கள் செய்ய வேண்டிய பரிகாரம்
இறைப் பரிகாரங்கள்:
1. குலதெய்வ வழிபாடு
திருமணத்திற்குப் பின்பு ஆண் பெண் இருவரும் ஒன்று சேர்ந்து ஆண் பெண் இரு வீட்டினரின் குலதெய்வத்திற்கு உங்களது மரபுப்படி பொங்கல் வைத்து ஐந்து நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும்.
2. அருள்மிகு கர்பரக்ஷாம்பிகை சமேத முல்லைவனநாதர் திருக்கோயில், திருக்கருகாவூர்
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கருகாவூர் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மன் ஆலயம் சென்று ஐந்து நெய் தீபம் ஏற்றி தம்பதிகளின் ராசி நட்சத்திரம் சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு அம்மனிடம் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
3. வியாழக்கிழமைகளில் அசைவ உணவுகளை சாப்பிடாமல் விரதம் இருந்து குரு பகவான் கோயிலுக்கு சென்று ஐந்து நெய் தீபம் ஏற்றி தம்பதிகளின் ராசி நட்சத்திரம் சொல்லி ஒரு அர்ச்சனை செய்துவிட்டு குரு பகவானிடம் குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்ய வேண்டும்.
மேற்கண்ட இறை பரிகாரங்களை நீங்கள் மேற்கொள்ளும் பட்சத்தில் கண்டிப்பாக உங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
உங்களுக்கு இறை பரிகாரங்கள் செய்ய எண்ணங்கள் இல்லாத பட்சத்தில் வாழ்வியல் பரிகாரங்களை நீங்கள் மேற்கொள்ளலாம்.
வாழ்வியல் பரிகாரங்கள்:
- ஏழை எளிய குழந்தைகளின் கல்விக்கு நீங்கள் உதவி செய்யலாம்.
- காப்பகத்தில் வளரும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு அன்னதானம் தொடர்ந்து வழங்கி வரலாம்.
- மேற்கண்ட பரிகாரங்களை நீங்கள் செய்யும் பட்சத்தில் குழந்தை பாக்கியம் உங்களுக்கு கிடைக்கும். குரு பகவானின் அருள் என்றும் கிடைக்கும்.
| தினப் பொருத்தம் என்றால் என்ன ? | Dina Porutham in Tamil |
| கணப் பொருத்தம் என்றால் என்ன ? | Gana Porutham In Tamil |




