தினப் பொருத்தம் என்றால் என்ன ? | Dina Porutham in Tamil
அனைவருக்கும் வணக்கம்! அனைவரும் தன் பிள்ளைகளுக்கு இனிய வாழ்வை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று,12 திருமணப் பொருத்தங்களை பார்ப்பது காலங்காலமாக நடக்கும் ஒன்று. ஆனால் ஒவ்வொரு பொருத்தத்தின் பொருள், பயன், சிறப்பு போன்றவற்றை தெரிந்து கொள்ள ஆர்வம் காட்ட தவறிவிட்டோம், இப்போது ஆர்வத்துடன் தெரிந்து கொள்ள விரும்பும் அனைவருக்குமான இணையதளம் இது.
இந்த பதிவில் நாம் பார்க்கப்போவது என்னவென்றால் திருமணப் பொருத்தத்தில் முதல் பொருத்தமான தினப் பொருத்தத்தின் முழுமையான விவரங்கள், வாங்க பார்க்கலாம்.
தினப் பொருத்தம் என்றால் என்ன? (Thina Porutham in Tamil)
சுருக்கமான குறிப்பு: திருமண வாழ்க்கையை தொடங்கிய பின் மணமக்கள் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு எந்த ஒரு சண்டை சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ்வார்களா என்பதை பார்ப்பதற்கு தான் தினப்பொருத்தம்.
“தினம் தினம் நன்றாக வாழ
தினப் பொருத்தம் வேண்டும்”
தினப் பொருத்தம் (விரிவான விளக்கம்)
இரு மனங்கள் இணைந்து ஒரு மனமாக வாழும் திருமண வாழ்க்கையில், கணவன் மனைவியின் ஆரோக்கியம், புரிதல் மற்றும் தினசரி வாழ்க்கை எப்படி இருக்கும்? போன்றவற்றை குறித்து கணிக்கப்படும் பொருத்தம் தினப் பொருத்தம். முக்கியமாக கருதப்படும் ஐந்து பொருத்தங்களில், இந்த தினப் பொருத்தமும் உள்ளது.
தினப் பொருத்தம் பார்ப்பது எப்படி ?

மொத்தம் 27 நட்சத்திரங்களை, 27 நாட்களில் கடந்து வருகிறது சந்திரன். அதாவது சந்திரன் ஒரு நட்சத்திரத்தில் இருந்து அடுத்த நட்சத்திரத்திற்கு பயணிக்கும், இப்படி சுற்றிவரும் போது மணமக்களின் இரண்டு ராசிகளும் பொருந்தும் வகையில் வந்தால் அவர்கள் சிறந்து வாழ்வார்கள்.
மணமகளின் ஜன்ம நட்சத்திரத்தை முதலாவதாகக் கொண்டு, மணமகனின் ஜன்ம நட்சத்திரம் வரை, ஒன்றொன்றாக கவனமாக விரல் விட்டு எண்ணி பார்க்க வேண்டும். அவ்வாறு எண்ணும் போது, 2,4,6,8,9,11,13,15,18,20,24,26 ஆம் நட்சத்திரங்கள் மணமகனின் நட்சத்திரமாக பொருந்திருந்தால், அதுவே மிகவும் பொருத்தம் உடையது. ஒருவேளை மணமகள் நட்சத்திரம் முதல் மணமகன் நட்சத்திரம் 3, 5, 7, 12, 14, 16, 21, 23, 25 ஆவது நட்சத்திரமாக வந்தால் தினப் பொருத்தம் இல்லை.
ஒவ்வொறு நட்சத்திரமும் 4 பாதங்களாக பிரிக்கப்பட்டு உள்ளது. மணமகள், மணமகனுக்கு முன்னுள்ள நட்சத்திர பாதத்தில் பிறந்திருந்தால் நல்லது என்பது பொதுவான கணக்கு.
ஆணின் நட்சத்திரம் பெண்ணின் நட்சத்திரத்திற்கு ஒரே இராசியாக இருந்தால் பொருத்தம் உள்ளது என்கிறோம். இந்த நெறிமுறையை ஒரே நட்சத்திரத்தில் பிறந்த மணமக்களுக்கு எடுத்துக்கொள்ள அனுமதி கிடையாது.
நட்சத்திரம் ஒன்றாக இருந்தாலும், ஒரே ராசியில் இருக்க வேண்டும் என்கிற நெறிமுறை உள்ளது.
ரோகிணி, திருவாதிரை, மகம், அஸ்தம், விசாகம், திருவோணம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய எட்டு நட்சத்திரங்களுக்கு, ஆண் பெண் ஒரே நட்சத்திரமாக அமைந்து இருந்தாலும் தினப் பொருத்தம் மிகவும் பொருந்தும். ஆனால் ரஜ்ஜூ பொருத்தம் என அழைக்கப்படும் மாங்கல்ய பொருத்தம் பொருந்தி வாராது, எனவே அந்த ஆண் பெண் திருமணம் செய்ய கூடாது. அது போலவே அசுவினி, கிருத்திகை, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், பூரம், உத்திரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்திராடம் ஆகிய 11 நட்சத்திரத்தில் பிறந்த ஆணும் பெண்ணும் ஒரே நட்சத்திரமாக அமைந்து இருந்தாலும் தினப் பொருத்தம் நடுநிலையாக இருக்கும் ஆனால் ரஜ்ஜூ பொருத்தம் இருக்காது என்பது கவனிக்க வேண்டியது.
பரணி, ஆயில்யம், சுவாதி, கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், பூராட்டாதி ஆகிய இந்த எட்டு நட்சத்திரங்களில் பிறந்த ஆண் பெண் ஒரே நட்சத்திரம் கொண்டவர்களாக இருந்தால் தினப் பொருத்தம் இல்லை.
பெண் நட்சத்திரத்திலிருந்து 27-ஆவது இடத்தில் ஆண் நட்சத்திரம் வந்தால், அந்த இரண்டு நட்சத்திரங்களும் ஒரே ராசியைச் சேர்ந்திருந்தால் மட்டுமே தினப் பொருத்தம் இருக்கும், வேறு இராசியைச் சேர்ந்திருந்தால் பொருத்தம் கிடையாது.
எனவே மணமகள் மற்றும் மணமகனின் நட்சத்திரங்களை அடிப்படையாக கொண்டு தினப் பொருத்தத்தை கணிப்பதால் இதற்கு நட்சத்திர பொருத்தம் என்ற பெயரும் உள்ளது.
தினப் பொருத்தம் என்றால் என்ன ? | Dina Porutham in Tamil
தினப் பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யலாமா?
திருமண பொருத்தத்தில் முக்கியமாக கருதப்படும் ஐந்து பொருத்தங்களில் முதலாவது தினப் பொருத்தம் ஆகும். திருமண வாழ்க்கையில் கணவன் மனைவிக்கு இடையே சண்டைகள் இல்லாமல் மகிழ்ச்சியாக தினம்தோறும் வாழ தினப் பொருத்தம் அவசியமானது. இருப்பினும் திருமண பொருத்தத்தில் மிகவும் முக்கியமான பொருத்தங்களிள் ரஜ்ஜூ, யோனி ஆகிய இரண்டு பொருத்தம் கண்டிப்பாக இருக்க வேண்டும்.
திருமண பொருத்தத்தில் தினப் பொருத்தம் இல்லாதபட்சத்தில், அதை சமப்படுத்தி ஈடு செய்ய அம்சங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். திருமண பொருத்தத்தை முக்கியமாக கருதுகிறோம் அதேவேளை லக்ன பொருத்தத்தை பெரும்பாலானோர் பார்ப்பதில்லை ஆனால் தினப் பொருத்தத்தை, லக்ன பொருத்தம் ஈடு செய்யும். ஆரோக்கியம், அதிர்ஷ்டம், ஆயுள் காலம் ஆகியவற்றை குறிப்பிட லக்ன பொருத்தம் பார்க்கப்படுகிறது.
திருமணப் பொருத்தத்தில் தினப் பொருத்தம் இல்லை, ஆனால் ஜாதகத்தில் ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள ஜென்ம லக்னம் 1,5,9 ஆக இருந்தால் முதல் தர தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
4, 7, 10 ஆக இருந்தால் இரண்டாம் தர லக்னமான தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
3,11 ஆக இருந்தால் மூன்றாம் தர தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம். அதுவே 2,6,8,12 லக்கனங்களாக வந்தால் விலக வேண்டிய நிலை எனலாம்.
தின பொருத்தமும் இல்லை ஜாதகத்தில் லக்கன பொருத்தமும் இல்லை என்றால் ஆண் பெண் இருவரின் ராசிப்படி ஜாதகத்தில் சுக்கிரன் ஒரே ராசியில் அமைந்தால் தின பொருத்தமாக எடுத்துக் கொள்ளலாம்.
| ஜாதகம் பொருத்தம் பார்க்க | Jathagam Porutham Online Tamil |




